செவ்வாய், 19 ஏப்ரல், 2016

யாளி

தமிழர்களின் பழம்பெரும் கோவில்களை அலங்கரிக்கும் பிரமாண்ட யாளி பற்றிய ஒரு தகவல்..

இந்த பூமியில் சில கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர் போன்ற ராட்சத விலங்குகள் வாழ்ந்ததாக அறிவியல் ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.  இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் இத்தகைய விலங்குகளை பின்னணியாகக் கொண்டு உலகில் பல திரைப்படங்கள் வெளிவந்து உலக மக்களை பெருமளவில் கவர்ந்தன.  அதன்மூலம் இன்றைய குழந்தைகள் வரை மானிட இனமே தோன்றாத காலத்தில் வாழ்ந்த அந்த விலங்குகளைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.  ஆனால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.

 தென் இந்தியாவில் காணப்படும் இந்து கோவில் கோபுரங்கள் முதல், மண்டபத்தின் தூண்கள் வரை, ஆயிரக்கணக்கில் ஒரு பிரமாண்ட விலங்கின் உருவத்தை சிலைகளாக பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.  அந்த விலங்குதான் யாளி.
 
நம்மில் மிகச்சிலரே இந்த பெயரை அறிந்திருப்போம். ஆனால் தென்இந்திய கோவில்களை பார்த்தவர்கள் எல்லோரும் அந்த உருவத்தை கண்டிப்பாக பார்த்திருப்போம். குறிப்பாக தமிழகம் முழுவதும் பரவிக்கிடக்கும் பல ஆயிரக்கணக்கான கோவில் கோபுரங்களில் எல்லாம் உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் எளிதில் பார்க்கலாம்.  அதுதான் யாளியின் முகம். மேலும் தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற, தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பழமையான கோவில்களின் மண்டப தூண்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழுஉயர, முப்பரிமாண யாளியின் சிலையும், அந்த யாளி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் எல்லோரும் பார்த்திருப்போம்.  இப்படிப்பட்ட யாளி சிலை தென் இந்தியாவில் உள்ள நூற்றுக்கணக்கான கோவில்களில் ஆயிரத்துக்கு மேல் சிலைகள் உள்ளன.  உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழுஉருவ, முப்பரிமாண சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.  
நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாளி சிலைகளை முழுமனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம்.  அது தான் யாளி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.
 
ஆயிரக்கணக்கில் சிலைகள் இருந்தும், கண்டுகொள்ளப்படாத நிலையில் இருக்கும் இந்த யாளியை உலக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சிதான் இது.

யாளி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா?

பண்டையகாலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா?
என்ற பல கேள்விகள் விடை இல்லாமலே இருக்கின்றன..

 யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பைக் கொண்டுள்ளன. அவற்றின் தலைகளோ வேறு ஒரு விலங்கின் சாயலில் வடிவமைக்கப்படுகின்றன. யானை, சிங்கம்  ஆடுகளின் தலைகளையும், அரிதாக நாய்  எலி போன்றவற்றின் தலைகளையும் யாளியிடம் காணலாம்.

யாளியின் வாயில் முட்டை வடிவில் ஒரு கல் உருண்டை இருக்கும். அதனைக் கையை விட்டுச் சுழற்றலாம்.ஆனால் வெளியே எடுக்க முடியாது.இதனை யாளி முட்டை என்பர்.

சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். தஞ்சாவூர் கோயிலில் கோபுரத்தில் யாளிகளுக்கு என்று தனி வரிசை இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக