வியாழன், 27 அக்டோபர், 2016

தீபா’வலி’யும் தமிழரும்!

தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

‘தீபம்’ என்றால் ‘விளக்கு’. ‘ஆவளி’ என்றால் ‘வரிசை’. அதாவது இந்த நாளில் விளக்குகளை வீட்டில் வரிசை வரிசையாய் அடுக்கி விளக்கேற்றி, இருண்டு இருக்கும் வீட்டை பிரகாசமாக வைப்பது ஆகும்.

தீபாவளி அல்லது தீப ஒளித்திருநாள் ஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி என்ற இப்பண்டிகையை இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட  வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி

மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

அனால் நம்மவரில் பெரும்பான்மையோர் அன்றைய தினத்தில்தான் குடியும் புலாலும் உண்டு அசுரர்களாக மாறி விடுகிறார்கள்.

தீபாவளி எதற்கு கொண்டாடுகின்றோம்?

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்ளை,  இந்து புராணங்கள் கூறுகின்றன. அவற்றில் சில
இராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால், அந்நாட்டில் உள்ள மக்கள் இராமனை வரவேற்பதற்கு, தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக இராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால், தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இலங்கையை ஆண்ட இராவணன், சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால், இராமன் இராவணனை எதிர்த்துப் போராடி, இராவணனை அழித்துவிட்டு, சீதையை மீட்டு கொண்டு, தனது தம்பியான இலட்சுமணனுடன், அயோத்திக்கு செல்லும் போது, அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க, நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று இராமாயண இதிகாசத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகௌரி விரதம் முடிவுற்றதும், அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு, ‘அர்த்தநாரீஸ்வரர்’ ஆக உருவெடுத்ததால், தீபாவளி கொண்டாடப்படுவதாக, ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

தீபாவளியும் மூடநம்பிக்கைகளும்

தீபா’வலி’யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாம்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் ‘தீபாவளி வாழ்த்துக்கள்’ சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? நமது மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.
ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதான் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழினவிடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள்.

முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

தீபாவளி பற்றி தமிழறிஞர்கள் ….

தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது.

அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்பர்.

சமண சமயப் பண்டிகையே தீபாவளி. சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை.
கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் ஸ்ரீ விளக்கு, ஆவலி ஸ்ரீ வரிசை தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கின்றது.

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.

ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி
நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80
தொகுப்பு . விபுலமாமணி சாஹித்யசாகரம் வி.ரி.சகாதேவராஜா

திங்கள், 24 அக்டோபர், 2016

தமிழ் எழுத்து பிறந்த கதை அறிவோமா?

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள (உயிர் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடாமலும் காற்றின் உதவியால் மட்டுமே ஏற்படும் ஒலி.

உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால்
காற்றை மட்டும் பயன்படுத்தி ஏற்படும் இவ்வொலிகளை உயிர் எழுத்துக்கள்.

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் (மெய் எழுத்துக்கள்)

நாக்கு வாயின் மேல் அண்ணத்தைத் தொடும்.

இவ்வொலிகளை ஏற்படுத்தும்போது காற்றின் பங்கைவிட உடலின் பங்கு அதிகம் என்பதால்
இவற்றுக்கு மெய்யொலிகள் என்று பெயர் சூட்டப்பட்டது.

உயிர் எழுத்துக்கள்: 12
மெய் எழுத்துக்கள்: 18
உயிர்மெய் எழுத்துக்கள்: 216
ஆய்த எழுத்து: 1
தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பதைக் காண்போம்.

க, ச, ட, த, ப, ற - ஆறும் வல்லினம்.
ங, ஞ, ண, ந, ம, ன - ஆறும் மெல்லினம்.
ய, ர, ல, வ, ழ, ள - ஆறும் இடையினம்.

உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள்
அ(படர்க்கை),
இ(தன்னிலை),
உ(முன்னிலை) என்பது பாவாணர் கருத்து.

தமிழின் மெய் எழுத்துக்களில்
வல்லினத்தில் ஒன்றும்,
மெல்லினத்தில் ஒன்றும்,
இடையினத்தில் ஒன்றுமாக
மூன்று மெய்யெழுத்துக்களை தேர்ந்தெடுத்தனர்.

அவை த், ம், ழ் என்பவை.

இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி

த்+அ கூடி 'த' வாகவும்,
ம்+இ கூடி 'மி' யாகவும்,
ழ்+உ கூடி "ழு" வாகவும் என்று
தமிழு என்று ஆக்கி,
பிறகு கடையெழுத்தில் உள்ள
உகரத்தைத் நீக்கி
தமிழ் என்று அழைத்தனர்.

செவ்வாய், 18 அக்டோபர், 2016

அசல் தேன்..?

மற்ற எந்த பொருள் மீதும் வராத சந்தேகம், தேன் என்றவுடன் ’அசல்’  தானா ? என்ற சந்தேகம்  நம்மில் பலருக்கு வருவது   சகஜம் !

உதாரணமாக நாம் பயன்படுத்தும் பாலை எடுத்துக் கொண்டோமானால் அதில் பல்வேறு விதமான கலப்படங்கள் செய்வதாக செய்திகள் வெளியாகினறன.

சமீபத்தில் பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் நேரடியாக பதிவு செய்த காட்சிகள் காண்பிக்கப்பட்டன. தண்ணீரை அதிகம் கலந்தாலும் தெரியாமல் இருப்பதற்காக மரம் ஒட்ட பயன்படுத்தும் பசையை கலப்பது. நுரை வருவதற்கு சோப்புத்தூள் போன்ற பொருட்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தேனைவிட பால் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகவும் பச்சிளம் குழந்தைகளுக்கு உணவாக பயன்படக்கூடியதாகவும் இருக்கிறது.
  
அசல் தேனை கண்டுபிடிக்க நம்மவர்கள் சொல்லும் வழிமுறைகள் என்னென்ன  என்று பார்ப்போம் !

– அசல் தேனை நாய் நக்காது !

– சுத்தமான தேனில் எறும்பு ஏறாது !

– கிளாஸ் தண்ணீரில் தேனை விட்டால் கரையாமல் அடிக்கு சென்று விடும் !

– பேப்பரில் ஊத்தினால் பேப்பர் நனையாது /ஊறாது

– நெருப்பில் எரியாது

போன்றவை பிரபலமானவையாகும்..

ஆனால் அறிவியல் பூர்வமாகவும் சரி, சாதரணமாக பரிசோதித்து பார்த்த வகையிலும் சரி மேற் சொன்ன எதுவுமே சுத்தமான தேனை கண்டுபிடிப்பதற்கு சரியான முறை இல்லை என்பது நிரூபனமாகி இருக்கிறது.

பல நேரங்களில் கலப்படத்தேனும்  இந்த பரிசோதனைகளில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறது.

எனவே, நீங்கள் செய்த சோதனையில் வெற்றி பெற்றது அசல் தேனா அல்லது போலி தேனா என்பதை எப்படி முடிவு செய்வீர்கள் ?

 சுத்தமான அசல் தேனை நாமே கண்டுபிடிக்க இதுவரை எந்த நிரூபிக்கப்பட்ட வழிமுறையும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. இருக்கும் ஒரே வழிமுறை அதற்குரிய பரிசோதனை சாலையில் பரிசோதித்து பார்ப்பதுதான்.இது எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் சாத்தியபடாது என்பதால் தேன் வாங்கும் போது நமக்கு தெரிந்த நம்பிக்கையான விவசாயிகள் அல்லது தேன் வளர்ப்பவர்களிடமிருந்து வாங்கலாம். இதனால் ஓரளவு ஏமாற்றப்படாமல் இருக்கலாம்.
                                 

திங்கள், 17 அக்டோபர், 2016

தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison.)

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் (Thomas Alva Edison.)

 பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்தி ருக்கிறான்.

 ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங் களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.

 ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.

 ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் தீப்பற்றியது. ரயில்வே அதிகாரி ஆத்திரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்கக் காது கேட்காமல் போனது.

 இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல.

 மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

 ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.

 எடிசன் 84 வயதில் மறைந்தார். அவரது உடலை அடக்கம் செய்யும்போது, அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் உத்தரவின் பேரில், அமெரிக்கா முழுவதும் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டன.

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

கவியரசு கண்ணதாசன் நினைவு நாள் !

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் 1927 ஜூன் 24ல் சிறகை விரித்து, சிகாகோ மண்ணில் 1981 அக்.,17ல் வாழ்வை முடித்துக் கொண்டவர். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தாலும், பிறருக்கு எட்டாத கருத்துக்களை கொட்டியவர்.

'பத்து வயதானதொரு பாலகன்
உன் சன்னதியில் பாடியதும் நினைவில் இலையோ முத்து என இட்ட பெயர் முத்தாக
வேண்டுமென முறையீடு செய்ததிலையோ! தமிழில் ஒரு கவிமகனை
சிறுகூடல் பட்டிதனில்
தந்த மலையரசித் தாயே'-

என மலையரசி கோயிலில் கவிதை வடித்தவர். அப்போது அவரது வயது பத்து. அவர் கவிஞர் கண்ணதாசன். வேலை கேட்டு ஒரு பத்திரிகை அலுவலகம் சென்றவரிடம், 'ஏதாவது இதழ்களில் எழுதி இருக்கிறீர்களா' என கேட்க, 'ஆமாம்' என்றார் கவிஞர். 'என்ன பெயரில் எழுதுகிறீர்கள்' என சட்டென கேட்க, கொஞ்சமும் தயக்கமின்றி, 'கண்ணதாசன் என்ற பெயரில்...' என்றார். இப்படித்தான் பெயரும், எழுத்தும் அவர் வசப்பட்டது.

கவிஞரின் ஞாபகமறதி...

கவிஞர் ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருந்தார். அண்ணா ரொம்பவும் சுமாரான சட்டையை அணிந்திருந்தார். அதை பார்த்த கவிஞர் அண்ணாவிடம் அந்த சட்டையை உடனே கழற்றித் தரும்படிக் கேட்டார். அண்ணாவும் கழற்றித் தர, கவிஞர் "நான் இதை அளவுக்காக எடுத்துச் செல்கிறேன் ஜப்பான் சில்க்கில் ஒரு டஜன் சட்டை தைத்து எடுத்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு போய் விட்டார். அத்தோடு அந்த விஷயத்தை கவிஞர் மறந்தும் விட்டார்.

அதன் பிறகு சில வாரங்கள் கழித்து மீண்டும் அண்ணாவைப் பார்க்க அவரது வீட்டுக்கு வந்தார் கவிஞர். அந்த நேரம் பார்த்து அண்ணா மேல் சட்டை எதுவும் அணியாமல் உட்கார்ந்து எதையோ எழுதிக் கொண்டு இருந்தார். ''என்ன அண்ணா வெற்றுடம்போடு இருக்கிறீர்கள்?'' என்று கேட்க, அண்ணாவோ, ''ஆமாப்பா போட்டிருந்த சட்டையையும் நீ பிடுங்கிக் கொண்டு போய் விட்டாய்... என்ன செய்வது?'' என்றார் குறும்புடன். கவிஞருக்கு அப்போதுதான் உரைத்தது. முதல் வேலையாக கடைக்குப் போய் ஒரு டஜன் ஜப்பான் சில்க் சட்டைகளை தைத்து கொண்டு வந்தார்.

படைப்பாற்றல் :

பெண்மையை போற்றி 'மாங்கனி' என்ற சிறு காப்பியம் படைத்தார். சங்கரர் வட மொழியில் எழுதிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில், 'பொன்மழை' யாகத் தந்தார். பஜகோவிந்தத்தை எளிய நடையில் மொழி பெயர்த்தார். பகவத்கீதைக்கு உரை விளக்கம் தந்தார்.
1944 - 1981க்கு இடையே அவர் 4ஆயிரம் கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேல் சினிமா பாடல்கள் எழுதியுள்ளார். தனது அனுபவங்களை கவிதையாக்கியவர். உதாரணமாக கண்ணதாசன்,
காங்கிரசில் இருந்து விலகினார். மீண்டும் அவரை காங்கிரசில் சேர்க்க தூதுவர் ஒருவரை
அனுப்பினார் காமராஜர். காமராஜரே நேரில் பேசாமல் தூது அனுப்பியது, கவிஞருக்கு வருத்தத்தை தந்தது. தனது ஆதங்கத்தை அப்போது 'பட்டணத்தில் பூதம்' என்ற படத்தில் வரும் பாடலில் தெரிவித்தார்... இப்படி:

'அந்த சிவகாமி மகனிடம்
சேதி சொல்லடி
எனை சேரும் நாள் பார்க்கச்
சொல்லடி
வேறு யாரோடும் நான்
பேச வார்த்தை ஏதடி
வேலன் இல்லாமல் தோகை ஏதடி'

என எழுதினார். சிவகாமி என்பது காமராஜரின் அன்னை பெயர்.
தத்துவங்களை எளிமையாக்கி பாமரரும் புரியும் வண்ணம் பாடல்களில் புகுத்திய சாதனை கவிஞருக்கே உரியது. அவரது 'அர்த்தமுள்ள இந்து மதத்தை' அவரது குரலிலேயே, தம்புரா இசைப் பின்னணியில் கேட்டுப்பாருங்கள். உலகமே உங்கள் வசப்பட்டதாய் உணர்வீர்கள். 270 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் வனவாசம் 30 பதிப்பு, மனவாசம் 20 பதிப்பையும் கண்டு சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

அரசவை கவிஞர்

'சாண்டோ சின்னப்பா தேவரின் 'தெய்வம்' படத்தில்

'மருதமலை மாமணியே முருகையா, தேவரின் குலம் காக்கும் வேலையா'

என்ற பாடலை எழுதினார். இசைக்கருவிகளும் பாடலும் போட்டிபோட்டு ஒலித்த இந்தப் பாடலுக்கு இரண்டு அர்த்தம் கொள்ளலாம். சின்னப்பா தேவருக்கு இப்பாடல் மிகவும் பிடித்துப் போயிற்று. நிரப்பாத செக்கை கொடுத்து கவிஞரை பாராட்டினார்.
ஒரு கவியரங்கில் கவிதை வாசித்த பத்து பேருக்கு கரவொலி கிடைக்கவில்லை. காரணம், கவிஞர் கவிதை வாசிக்க வேண்டும் எனக் கூட்டம் காத்திருந்ததுதான். கடைசியில் கவிஞர் கவிதை வாசித்தார். கைதட்டல் அடங்க நேரமாயிற்று.கவிஞர் சொன்னார், 'யார் கவிதை வாசித்தபோது நீங்கள் கூச்சலிட்டீர்களோ அவர் எழுதிய கவிதைதான் இது. புகழ்பெற்றவர் என்பதற்காக கைதட்டல் என்பது நல்ல மரபல்ல. நீங்கள் கவிதையை ரசிக்கவில்லை. வாசித்த நபரின் புகழைப் பார்க்கிறீர்கள். இது நல்ல பண்பல்ல', என்றார். கவிஞரின் தமிழாற்றலை உணர்ந்தவர்
எம்.ஜி.ஆர்., அதனால்தான் அவர் முதல்வராக இருந்தபோது, கவிஞர் கண்ணதாசனை அரசவை
கவிஞராக்கினார்.மதுவிலக்கு அமலில் இருந்தபோது மதுகுடிப்பதற்கான பெர்மிட் பெற, அமைச்சர் கக்கனை சந்தித்தார். 'எனது பெர்மிட் என்ன ஆனது' என்ற அவரது குரலில் கோபம் கொப்பளித்தது. அமைச்சர் கக்கன், 'சற்று அமருங்கள். தமிழ் நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காகவே பெர்மிட்டில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறேன்' எனச் சொல்ல, கவிஞரின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.ஏசுகாவியம் எழுதுவதற்காக குற்றாலத்தில் பாதிரியார் தம்புராஜூடன் இருந்தார். தினமும் காலையில் குளித்து, நெற்றி நிறைய விபூதி பூசிய பின்பு, பகல் முழுவதும் ஏசுகாவிய எழுத்துப்பணி.அவர் மதுஅருந்துவார் என்பதை உணர்ந்த பாதிரியார், 'தேவையெனில் மாலையில் மதுஅருந்தி ஓய்வெடுங்கள்' என்றார்.
கவிஞரோ 'இப்பணி முடியும் வரை மது அருந்தமாட்டேன். இது உலக மக்களின் உயர்ந்த நூல் என்பதை என்மனம் சொல்கிறது' என்றார்.

கேள்விகளுக்கு மதிநுட்பத்தோடு பதில் சொல்வார்.
'அரசியல் மேடைக்கும்,
இலக்கிய மேடைக்கும் என்ன வித்தியாசம்'
என்றதற்கு, 'அரசியல் மேடை மனிதனை முட்டாளாக்குவதற்காகப் போடப்படுவது, இலக்கிய மேடை முட்டாள்தனத்தை தெளிய வைப்பதற்காக போடப்படுவது' என்றார்.
'உங்கள் புத்தகத்தை படிப்போருக்கு நீங்கள் சொல்லும் புத்திமதி' என்ன என்றதற்கு,
'புத்தகத்தில் உள்ள கருத்துக்களை பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள்' என போட்டு உடைத்தார் இதற்கும் ஒருபடி மேலே சென்று, 'எப்படி வாழக்கூடாது என்பதற்கு எனது வாழ்க்கையின் முற்பகுதியையும், எப்படி வாழ வேண்டும் என்பதற்கு காந்தியடிகளின் சுயசரிதையும் உங்களுக்கு வழிகாட்டும்' என்று வனவாசத்தில் சொன்னவர் கவியரசர்.
சினிமா உலகில் கால்பதிக்க அவர் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானதாக இல்லை. 'கலங்காதிரு மனமே' என்ற பாடலுடன் துவங்கி, 'கண்ணே கலைமானே' என்ற பாடலுடன் நிறைவானார். 'சாத்தப்பனுக்கு மகனாக பிறந்தான். ஆனால் இவன்தான் சினிமா பாடல்கள் மூலம் எல்லா வாசல்களையும் திறந்தான்' என்கிறார் கவிஞரைப் பற்றி நெல்லை ஜெயந்தா.
'கண்ணதாசன் முறையாக தமிழ் படித்தவரில்லை' என, சில தமிழறிஞர்கள் சொன்னபோது, 'அதனாலென்ன, தமிழுக்கு கண்ணதாசனைத்தான் தெரிகிறது' என பதிலடி கொடுத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.

கவிதைக்கு ராஜா கண்ணதாசன்' என காமராஜர் பாராட்டினார் என்றால், அர்த்தமில்லாமலா இருக்கும்?

-ரா.சொக்கலிங்கம்