வியாழன், 17 மே, 2018

கனவுகள்...

தூக்கம் என்பது ஒரு பயணம் போலத்தான். ஒவ்வொரு நாளும் தூங்கி எழுந்திருக்கும்போது நம் மனம் ஒரு பயணத்தை முடிக்கின்றது. நம் தூக்கத்தை மூன்று நிலைகளாக பிரிக்கலாம்.

1. மந்தமான விழிப்புக்கும் லேசான தூக்கத்திற்கும் இடைப்பட்ட நிலைகளை. கண் சொக்குதல் இந்த நிலையில் ஏற்படுகிறது.

2. உண்மையான தூக்கம் இங்கே மனதில் நெருக்கமற்ற, உலகு சார்ந்த நினைவு போன்றவை ஏற்படுகின்றன. அதாவது நம்மை சுற்றி நடப்பவை உண்மையும் கற்பனையும் கலந்ததது போல் தோன்றும் நிலை. முதல் நிலையிலிருந்து  இரண்டாம் நிலைக்கு விரைவில் சென்று விடுவோம்.

3. டெல்டா தூக்கம் அல்லது ஆழ்ந்த தூக்கம் இதற்கு செல்ல எப்படியும் 20-30 நிமிடங்கள் ஆகும். ஆழ்ந்த தூக்கத்தில் கனவு காணுவது என்பது மிக மிக குறைவாகவே ஏற்படுகிறது. இந்த நிலையில்தான் நம் ஆழ்மனதுடன் தொடர்பு ஏற்படுகிறது, வெளி மனதின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் ஞாபகங்கள், நம் நோக்கங்கள், பிரச்சினைகள் அப்படியே உள்ளன. ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற 30-40 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் இரண்டாம் நிலைக்கு வந்து விடுகிறோம். எனவே தூங்க ஆரம்பித்து 70-90 நிமிடங்களில் நம் முதல் REM தூக்கம் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஒரு தற்காலிக விழிப்பு போன்ற நிலை ஏற்படுகிறது.

நாம் மூன்று நிலைகளில் வாழ்கிறோம்.
1. நிஜ உலகு. 2. கற்பனை 3. கனவு. மனமானது.
ஆழ்மனம் மூன்று நிலைகளிலும் வேலை செய்கிறது. ஆனால் வெளிமனது மூன்று நிலைகளிலும் முழுமையாக ஈடுபடுவதில்லை. மூன்று நிலைகளுக்குமான வேறுபாட்டையும் மூன்று நிலைகளிலும் வெளிமனதை வாழ பழக்கினால் கனவைப் பற்றி முழுமையாக நம்மால் புரிந்துகொள்ள முடியும். இதைச் செய்வதால் கனவைப் பற்றி மட்டும் அறியாமல் நம் மனதில் பல விஷயங்களையும் சக்திகளையும் புரிந்துகொள்ள முடியும், பெறமுடியும்.

நம் நிஜ உலகின் இருப்பை நமக்கு உணர்த்துவதில் பெரும்பங்கு வகிப்பது நம் புலன் உணர்ச்சிகளே. ஆனால் நாம் எப்போதும் விழிப்பு நிலையில் இருப்பதில்லை. உளவியலில் சில விசயங்களை ஆராயச் சென்றபோது நான் கண்டறிந்தது மனதை பண்படுத்தும் பல பயிற்சிகள் நம் முன்னோர்கள் சொன்ன ஆன்மீக/யோக பயிற்சிகளை போல் உள்ளது. கிட்டதட்ட நான் யார் என்ற கேள்விக்கு விடைதேடுவது போல இப்பயிற்சிகள் உள்ளன. எல்லாமே எளிமையானவைதான். ஆனால் அதை செய்ய செய்ய நமக்குள் தானாக ஏதோ மாற்றங்கள் உண்டாகின்றன. அதனை முறையாக பயன்படுத்தும்பொழுது பல பயன்கள் கிடைக்கின்றன.

நம் இருப்பை உணர்தல்:

நீங்கள் இருக்கிறீர்களா? இதென்ன கேள்வி இருக்கிறேனே! சரி என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இதை படித்துக் கொண்டிருக்கிறேன். பிறகு, பாட்டு கேட்கிறேன், பிறகு அருகில் உள்ளவர்களிடம் அவ்வப்போது பேசுகிறேன். இப்படி நீங்கள் செய்யும் ஓவ்வொரு செயல்களையும் எப்போதும் ஊன்றி கவனித்துக் கொண்டே இருக்கிறீர்களா?? இல்லை!!!!

விழிப்புநிலை - ஒரு பயிற்சி:

இந்த பயிற்சியில் கற்பனையாக நினைத்து அதனை நிஜமாக உணர வேண்டும். கற்பனையாக ஒரு பொருளை நினைத்தல் அந்த பொருளின் நுணுக்கங்களை கற்பனையில் கவனித்தல் மனதில் விழிப்புணர்விற்கு பெரிதும் உதவுகிறது. கீழ்காண்பவற்றை கற்பனையாக செய்யவும்.

1.பார்த்தல். நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ. அதன் வடிவம், நிறம், அசைவு, பரிமாணம், அதன் நுணுக்கங்கள் அதைச் சுற்றியுள்ளவை எல்லாவற்றையும் கூர்ந்து நோக்குங்கள்.

2. கேட்டல் - நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ அதன் தொனி, ஏற்ற இறக்கம், ரிதம், ஒலி அளவு போன்றவற்றை கூர்ந்து கேட்டல்.

3. நுகர்தல் - வாசனை எந்த வித வாசனையை முகர்கிறீர்கள். மண், பழங்கள், மலர்கள் இவற்றின் ஒவ்வொரு வாசனையை நுகர்ந்து உணர்தல்(அதாவது ஒரு ரோஜாவை நினைத்தால் அதன் வாசனையை கற்பனையிலேயே உணர்தல்).

4. சுவைத்தல் - கற்பனையில் பலவித பொருட்களின் சுவையை உணர்தல்

5. தொடு உணர்வு - இது மிக முக்கியமானது. சூடு, குளிர்ச்சி, ஈரம், வலி, சாதாரண தொடுதல், சொரசொரப்பானதை தொடுதல் வழப்பானதை தொடுதல், எடை, போன்ற பல உணர்ச்சிகளை

6. சுவாசம் - நாம் எப்போதும் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் அதை எல்லா சமயங்களிலும் உணர்வதில்லை. நம் சுவாசத்தை ஆழமாக கவனியுங்கள்.சீராக சுவாசிக்கவும். அதை ஆழமாக உற்று நோக்கவும்.

7. உணர்ச்சிகள் - நம் உணர்ச்சிகளான கோபம், சந்தோசம், கவலை, வருத்தம், வெறுப்பு போன்ற உணர்வுகளை கற்பனையில் நினைக்கவும். மனதால் உணரவும்.

8. எண்ணம்- இவ்வளவு நேரமாக இவை அத்தனையையும் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சிந்தித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் உணர வேண்டும். அதாவது ஒவ்வொரு சமயமும் நாம் இப்போது என்ன யோசித்து கொண்டிருக்கிறோம் என உணர்தல்.

9. நான் - உங்கள் உலகத்தில் நீங்களும் இருக்கிறீர்கள். ஆமாம் நாம் நம்மைச் சுற்றியுள்ளவற்றை வைத்தே அனைத்தையும் யோசிக்கிறோம், உணர்கிறோம். நான் இதைச் செய்கிறேன் என்கிற போது நீங்கள்(அதாவது உங்கள் மனம்)
உங்களுக்குள் இருந்து யோசிக்கிறது. உங்கள் மனதை உங்களை வெளியே வந்து யோசிக்கச் செய்யுங்கள் நீஙகள் செய்வதை வெளியிலிருந்து ஒரு வேறு நபரை கவனிப்பது போல செய்பவற்றை கவனிக்க செய்யுங்கள்.

10. விழிப்புணர்வை உணர்தல்- நீங்கள் எப்போதும் எல்லாவற்றையும் ஆழ்ந்து நோக்குகிறீர்கள் என்பதை உணர்தல.

மேற்கண்டவைகளை நீங்கள் படிக்கும்பொழுது புரிந்தும் புரியாமல் ஏதோ ஆன்மீகக் கட்டுரை படிப்பது போல இருக்கலாம். ஆனால் இவை அனைத்து நம் மனதை பண்படுத்தும் அடிப்படை உளவியல் பயிற்சிகள் ஆகும். உண்மையில் நீங்கள் இப்படி கற்பனையில் நினைத்து பார்ப்பதுதான் கனவிலும் நடக்கிறது. நிஜ உலகிலும் இப்படி ஒவ்வொன்றையும் ஒருமுறை கூர்ந்து கவனிக்கலாம். அதற்கு சுமார் 10 நிமிடங்கள் ஆகலாம். ஆனால் அந்த செயலை செய்து முடித்தபின்னும் மனம் ஒரு புத்துணர்வோடு இருப்பதை நாம் உணர முடியும்.

நீங்கள் நான் யார் என உண்மையாக யோசித்திருக்கிறீர்களா??? நான் யார் என 2 நிமிடம் யோசித்தாலே உள்ளுக்கும் ஒரு இனம் புரியாத பயம் போன்ற உணர்வு ஏற்படலாம். இது மனம் தன்னையே கேட்கும் கேள்வியால் ஏற்படுகிறது. நான் என்பது மனம் மட்டுமே.