வியாழன், 30 ஜூன், 2016

ஹோண்டாவின்‬ ‪வெற்றிப்‬பயணம்‬!

“பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று அந்த 18 வயது இளைஞனைத் திட்டினார் அவனது அப்பா.
“தோல்விக்கென்றே பிறப்பெடுத்த ‪"‎துரதிர்ஷ்டக்காரன்‬” என்று கேலி பேசினர் அவனது ‪நண்பர்கள்‬.
அவன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ ‪‎தற்கொலை‬ முடிவுக்குப் போயிருக்கக்கூடும்.அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியைச் சாதித்த அந்த மாமனிதர் சாய்க்கிரோ ஹோண்டா.

தனது வாழ்க்கை அனுபத்தைச் சாறுபிழிந்து சொன்னார்:

“வெற்றி என்பது 99 சதவிகிதம் ‪‎தோல்வி‬.”

டொயோட்டா கம்பெனிக்குப் பிஸ்டன் தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவர் காத்திருக்கவில்லை. அப்பாவின் வசவு, சக மாணவர்களின் பரிகசிப்புக்கு இடையே, மாதிரி உலைக்கூடம் ஒன்றை 1928-ம் ஆண்டு உருவாக்கினார். இரவு பகலாக உழைத்தார்.
ஓராண்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி பிஸ்டனை பெரும் எதிர்பார்ப்புடன் ‪‎டொயோட்டா‬ கம்பெனிக்கு எடுத்துச் சென்றார். “எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது பிஸ்டன் இல்லை” என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டிவைத்த முதலீடு மொத்தமும் காலி. எல்லோரும் வசைமாரி பொழிந்தார்கள். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய பிஸ்டன் மாதிரியை டொயோட்டா கம்பெனி, “‪அருமை‬” என்று பாராட்டி ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்குக் கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு. பெரிய தொழிற்கூடம் கட்டினால்தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையில் பிஸ்டன் தயாரிக்க முடியும். எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்ட் தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டைச் சிமென்ட்கூட கிடைக்கவில்லை.
“ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு”என்றார் அப்பா.
“வாழ்க்கை முழுவதுமா ‪ரிஸ்க்‬ எடுத்துக்கொண்டே இருப்பாய்?” என்றான் உயிர் நண்பன்.
தனது நலன் விரும்பிகளுடன் விவாதித்து, சிமென்ட் கலவைக்கு இணையான மாற்றுக் கலவையை உருவாக்கும் ஃபார்முலாவை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கே கடன் வாங்கி, அடுத்த சில மாதங்களில் பெரிய தொழிற்சாலையைக் கட்டி முடித்தார். தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, பிஸ்டன் தயாரிக்கும் தொழில் அமர்க்களமாகத் தொடங்கியது.
கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது. அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்துச் சுக்குநூறாக்கியது. ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால், தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி இடிபாடுகளைச் சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.
ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கிவிட்டது. மொத்தத் தொழிற்சாலையையும் திருப்பிக்கட்ட முடியாத அவலநிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு டொயோட்டா கம்பெனிக்கு விற்றுவிட்டார் ஹோண்டா. இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப் பாருங்கள்.

ஹோண்டா தனது அப்போதைய நிலைமைபற்றிச் சொல்கிறார். “நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கி விடுவேன்.”
இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். ஜப்பான் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலகட்டம். எங்கும் பெட்ரோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன. எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிள் மிதிக்கிறார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்தச் சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம்புது ஐடியா பளிச்சிட்டது. அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்தியபோது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது. அதை எடுத்துக்கொண்டு ஜம்மென்று சுற்றி வந்தார் ஹோண்டா.
‘‘அதே போன்று எனக்கும் செய்துகொடு’’ என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள். அவரும் சளைக்காமல் செய்துகொடுத்தார். விளைவு? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை. வங்கிகள் கடன் தரத் தயாரில்லை. ‘ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன்’ என்று எல்லோரும் சான்றிதழ் கொடுத்துவைத்திருந்தார்கள். கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்குப் பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்
குக் கடிதம் எழுதினார். முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார். 5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் கம்பெனி உதயமானது. முதலில் தயாரான மோட்டார் சைக்கிள்குறித்த விமர்சனங்கள் வந்தபோது, தானே உலைக்கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் ரகங்களைக் கொண்டுவந்தார்.
அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா கம்பெனி ஆண்டுக்குச் சுமார் 2 கோடி மோட்டார் பைக்குகளைத் தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேலை நாடுகளிலும் பெரும் வரவேற்பு. எத்தனையோ வகை வகையான தயாரிப்புகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.
ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது, அதன் பிதாமகன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்: 

“வெற்றி என்பது 99 சதவிகிதம் தோல்வி.”

செவ்வாய், 28 ஜூன், 2016

வாழைஇலையின் மகத்துவம்..

l நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு
* தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது.
* வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
* சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மணமாகவும் இருக்கும்

எவர்சில்வர் பயன்பாட்டிற்கு பிறகு வீடுகளில் பெருபாலானோர் இலையை, மறந்து தட்டுக்கு மாறியுள்ளனர். நகரங்களில்தான் வாழைமரம் வளர்த்து இலை பறிக்க எல்லோருக்கும் வாய்ப்பிருக்காது. வாய்ப்புள்ள கிராமங்களிலும் தட்டையே பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல வீட்டில் பெண்களுக்கும் சாப்பாட்டு தட்டு கழுவுகிற வேலை மிச்சம். நேரம் மிச்சம். பாத்திரம் கழுவுகிற தண்ணீர் மிச்சம். பாத்திரத்தை கழுவ பயன்படுத்தும் ராசயண சோப்பின் பயன்பாடு குறைவு என நன்மைகளை உணரமுடிந்தது.இலை, பாலீதீன் தாள்களைப் போல் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என்பது இன்றைய விஞ்ஞான உலகுக்கு முக்கியச்செய்தி.

நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.  
  
தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது

2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள
இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல்
ஊறுகாய்

5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்

4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்.

முதலில் பருப்பு மற்றும்
நெய்  ( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ),
பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ),      பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும்).

சனி, 25 ஜூன், 2016

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு

இஞ்சி ஒத்தடம்:
=============

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.

பாதத்தின் நான்காம் விரல்:

நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.

உணவு முறை
============

சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.

பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================

உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்கலாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பால் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.

சனி, 18 ஜூன், 2016

தியாகி கக்கன் அவர்கள்...

உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் உயர் திரு கக்கன் அவர்கள் ஒரு வைரகல். 
உயர் திரு.கக்கன் போன்ற நாணயமான அரசியல்வாதி இந்திய அரசியல் கட்சிகள் எதிலும் கிடையாது . 

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர். 
மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார்.
மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது.
இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.
சுதந்திர போராட்டம்

காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.
தமிழக அரசியல்
இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது. 
தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். 
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களினால் ஆரம்பிக்கபட்டது.
அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.
அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார். 
பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.
கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார். 

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.
கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு, திரு.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார்.
எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

வியாழன், 16 ஜூன், 2016

ஆலமரம்...

மனிதர்களுக்கு இல்லாத பல மகத்துவங்கள் மரங்களுக்கு இருக்கின்றன. இது இயற்க்கையின் படைப்பின் விசித்திரம்..

'சபைதனிலே நீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம்' என்பது பாடல்.

அறிவற்றவனைப் பார்த்து 'ஏன் நெடுமரம் போல் நிற்கிறாய்'? எனக் கேட்பது பொது வழக்கு.

உயிருடன் இருக்கும் பொழுது காய், கனி, பூ, பிஞ்சு, கிழங்கு எனத் தந்து உணவாகின்றன.
இறந்தும் நமக்கு உணவு சமைக்க விறகாகின்றன. அது போலவே விலங்கினங்கள் இருந்தும் இறந்தும் பயன்படுகின்றன. ஒரு சில மனிதர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இருந்தும் பயனில்லை, இறந்தும் பயனில்லை.

இனி ஆலின் மாண்பைக் காண்போம். ஆலமரம் ஒன்றுதான் அதன் சிறப்பை நோக்கிப் பத்திற்கும் மேற்பட்ட பெயர்களினால் அழைக்கப் பெறுகின்றது.

கான்மரம்- தனிமரமே தோப்பாகும் அதிசயம். அடையார் கலாஷேத்திரத்திற்குச் சென்றால் இதனைக் காணலாம்.

ந்யக்ரோதம்- கீழ் நோக்கி வளரும் இயல்பினைக் கொண்ட வேரை உடையது. மேலே செல்லாமல் மட்டமாக வளரும்.

தொன் மரம்- பல நூற்றாண்டுகள் வாழும்.

பழுமரம்- எண்ணிக்கையற்ற பழங்களைக் கொண்டிருக்கும்.

பாலி- பால் உடையது. ஆலம் பால் உறுதி பயக்கக்கூடியது. கிராமத்து மக்கள் இன்னும் பல்துலக்கும் தூரிகையாக ஆலம் விழுதை உபயோகித்து வருகின்றனர்.

முதுமையிலும் அவர்கள் பற்கள் விழுவதில்லை. இதைக் குறித்துத்தான் 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற தொடர் தோன்றியது.

கோளி- பூ வெளியே தெரியாது.

பூதவம்- புனிதம் நிறைந்தது.

சிவம்- மங்கலத் தன்மையுடன் விளங்குவது.

பகுபதம்- பல வேர்களைக் கொண்டது.

வடம்- கவிந்திருப்பதன் காரணம்.

வனஸ்பதி- பூ இல்லாமல் காய்த்துப் பழம் தரும்.

ஆல், அரசு, அத்தி அம்மூன்றுமே பூவாகாமல் காய்க்கும் உயர்ந்த தன்மையைக் கொண்டன.

எத்தனை வாடினாலும் மற்ற இலைகளைப் போல் உடைவது இல்லை. வாடிய ஆலிலையின் மேல் சிறிது நீர் தெளித்தால் மீண்டும் புதிய தோற்றம் பெறும். மேலும் ஆலம் இலையில் வைத்து உணவு உண்டால்  அது மருந்தாக மாறி வயிற்று நோய், குடற்புண்களை அகற்றுகின்றது.

அந்தணக் குடும்பத்தில் முதல் கரு வாய்த்திருக்கும் பெண்களுக்கு  செய்யப்படும் சடங்குகளில் ஒன்று பும்சுவனம். இது கருத்தரித்த மூன்றாம் மாதத்தில் கணவனின் வீட்டில் நடத்தப்படுவது. கர்ப்பவதிகளுக்கு ஏற்படும்  கருச்சிதைவு போன்றவை நிகழாமல் காப்பதற்காகச்  செய்யப்படுவது.

ஆதிகாலத்து  அறுவைச் சிகிச்சை நிபுணரும்  புகழ் பெற்ற மருத்துவருமான சுஸ்ருதர் கர்ப்பவதியின் வலது மூக்கில் ஆலம் விழுதினை நசுக்கிப் பிழிய வேண்டும் என்று கூறுகின்றார்.

பித்தம் அதிகமாதல், வயிற்று நோவுகள் போன்றவற்றிற்கு ஆலம் விழுதின் சாறு அருமையான மூலிகையாகும்.

திருமணம் ஆனதும் மணமக்களை வாழ்த்தும் பொழுதும் முனைமுறியாத பச்சரிசியை (அட்சதை) மஞ்சல் கலந்து தம்பதிகளின் சிரசிலிட்டு 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாயாக' என வாழ்த்தும் மரபு ஆல், அறுகின் சிறப்பை நோக்கியதாகும்.

அலின் பழம், காய்,  விழுது அனைத்துமே மருத்துவப் பயன்மிக்கன. ஆலமரம் புராணத்துடனும் தொடர்புபடுகின்றது.

என்றும் அழியாததான வயது கண்டறிய முடியாமல் மூத்துச் செழித்திருக்கும்  இந்த ஆலமரத்தின் அடிப்பாகத்தை பிரயாகையிலும் நடுப்பகுதியைக் காசியிலும் நுனிப்பகுதியை கயாவிலும் காண அமைந்துள்ளதாக புரதான சாத்திரங்கள் கூறுகின்றன.

அரச மரம் போல ஆல மரமும் உயர்ந்து வளரும்.இதன் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறிவிடுவதால், ஆலமரத்தின் அடிமரம் அரிக்கப்பட்டாலும்(கரையான்கள் அடிமரத்தை அரித்துவிடும்) விழுதுகள் அதனைதாங்கிக் கொள்கின்றன."ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" -அதாவது ஆல மரத்தின் விழுது மற்றும் வேப்பமரத்தின் குச்சி போன்றவற்றால் பல் துலக்கினால் பற்கள் உறுதியாக இருக்கும்.

கோவில் இல்லாத ஊர் இல்லாத மாதிரி ஆலமரம் இல்லாத ஊரும் இருக்க முடியாது. ஆலமரம் மக்கள் கூடும் இடமாகவும், இளைப்பாரும் இடமாகவும், விளையாட்டு மைதானமாகவும். பிரச்னை பேசும் மன்றங்களாவும் இருந்திருக்கிறது. கிராமத்து மக்களுக்கு ஆலமரம் மறக்க முடியாத இன்னொரு வீடாக இருக்கும்.