வியாழன், 16 ஜூன், 2016

ஆலமரம்...

மனிதர்களுக்கு இல்லாத பல மகத்துவங்கள் மரங்களுக்கு இருக்கின்றன. இது இயற்க்கையின் படைப்பின் விசித்திரம்..

'சபைதனிலே நீட்டோலை வாசியா நின்றான் நெடுமரம்' என்பது பாடல்.

அறிவற்றவனைப் பார்த்து 'ஏன் நெடுமரம் போல் நிற்கிறாய்'? எனக் கேட்பது பொது வழக்கு.

உயிருடன் இருக்கும் பொழுது காய், கனி, பூ, பிஞ்சு, கிழங்கு எனத் தந்து உணவாகின்றன.
இறந்தும் நமக்கு உணவு சமைக்க விறகாகின்றன. அது போலவே விலங்கினங்கள் இருந்தும் இறந்தும் பயன்படுகின்றன. ஒரு சில மனிதர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இருந்தும் பயனில்லை, இறந்தும் பயனில்லை.

இனி ஆலின் மாண்பைக் காண்போம். ஆலமரம் ஒன்றுதான் அதன் சிறப்பை நோக்கிப் பத்திற்கும் மேற்பட்ட பெயர்களினால் அழைக்கப் பெறுகின்றது.

கான்மரம்- தனிமரமே தோப்பாகும் அதிசயம். அடையார் கலாஷேத்திரத்திற்குச் சென்றால் இதனைக் காணலாம்.

ந்யக்ரோதம்- கீழ் நோக்கி வளரும் இயல்பினைக் கொண்ட வேரை உடையது. மேலே செல்லாமல் மட்டமாக வளரும்.

தொன் மரம்- பல நூற்றாண்டுகள் வாழும்.

பழுமரம்- எண்ணிக்கையற்ற பழங்களைக் கொண்டிருக்கும்.

பாலி- பால் உடையது. ஆலம் பால் உறுதி பயக்கக்கூடியது. கிராமத்து மக்கள் இன்னும் பல்துலக்கும் தூரிகையாக ஆலம் விழுதை உபயோகித்து வருகின்றனர்.

முதுமையிலும் அவர்கள் பற்கள் விழுவதில்லை. இதைக் குறித்துத்தான் 'ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' என்ற தொடர் தோன்றியது.

கோளி- பூ வெளியே தெரியாது.

பூதவம்- புனிதம் நிறைந்தது.

சிவம்- மங்கலத் தன்மையுடன் விளங்குவது.

பகுபதம்- பல வேர்களைக் கொண்டது.

வடம்- கவிந்திருப்பதன் காரணம்.

வனஸ்பதி- பூ இல்லாமல் காய்த்துப் பழம் தரும்.

ஆல், அரசு, அத்தி அம்மூன்றுமே பூவாகாமல் காய்க்கும் உயர்ந்த தன்மையைக் கொண்டன.

எத்தனை வாடினாலும் மற்ற இலைகளைப் போல் உடைவது இல்லை. வாடிய ஆலிலையின் மேல் சிறிது நீர் தெளித்தால் மீண்டும் புதிய தோற்றம் பெறும். மேலும் ஆலம் இலையில் வைத்து உணவு உண்டால்  அது மருந்தாக மாறி வயிற்று நோய், குடற்புண்களை அகற்றுகின்றது.

அந்தணக் குடும்பத்தில் முதல் கரு வாய்த்திருக்கும் பெண்களுக்கு  செய்யப்படும் சடங்குகளில் ஒன்று பும்சுவனம். இது கருத்தரித்த மூன்றாம் மாதத்தில் கணவனின் வீட்டில் நடத்தப்படுவது. கர்ப்பவதிகளுக்கு ஏற்படும்  கருச்சிதைவு போன்றவை நிகழாமல் காப்பதற்காகச்  செய்யப்படுவது.

ஆதிகாலத்து  அறுவைச் சிகிச்சை நிபுணரும்  புகழ் பெற்ற மருத்துவருமான சுஸ்ருதர் கர்ப்பவதியின் வலது மூக்கில் ஆலம் விழுதினை நசுக்கிப் பிழிய வேண்டும் என்று கூறுகின்றார்.

பித்தம் அதிகமாதல், வயிற்று நோவுகள் போன்றவற்றிற்கு ஆலம் விழுதின் சாறு அருமையான மூலிகையாகும்.

திருமணம் ஆனதும் மணமக்களை வாழ்த்தும் பொழுதும் முனைமுறியாத பச்சரிசியை (அட்சதை) மஞ்சல் கலந்து தம்பதிகளின் சிரசிலிட்டு 'ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வாயாக' என வாழ்த்தும் மரபு ஆல், அறுகின் சிறப்பை நோக்கியதாகும்.

அலின் பழம், காய்,  விழுது அனைத்துமே மருத்துவப் பயன்மிக்கன. ஆலமரம் புராணத்துடனும் தொடர்புபடுகின்றது.

என்றும் அழியாததான வயது கண்டறிய முடியாமல் மூத்துச் செழித்திருக்கும்  இந்த ஆலமரத்தின் அடிப்பாகத்தை பிரயாகையிலும் நடுப்பகுதியைக் காசியிலும் நுனிப்பகுதியை கயாவிலும் காண அமைந்துள்ளதாக புரதான சாத்திரங்கள் கூறுகின்றன.

அரச மரம் போல ஆல மரமும் உயர்ந்து வளரும்.இதன் விழுதுகள் பூமிக்குள் நுழைந்து வேர்களாக மாறிவிடுவதால், ஆலமரத்தின் அடிமரம் அரிக்கப்பட்டாலும்(கரையான்கள் அடிமரத்தை அரித்துவிடும்) விழுதுகள் அதனைதாங்கிக் கொள்கின்றன."ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி" -அதாவது ஆல மரத்தின் விழுது மற்றும் வேப்பமரத்தின் குச்சி போன்றவற்றால் பல் துலக்கினால் பற்கள் உறுதியாக இருக்கும்.

கோவில் இல்லாத ஊர் இல்லாத மாதிரி ஆலமரம் இல்லாத ஊரும் இருக்க முடியாது. ஆலமரம் மக்கள் கூடும் இடமாகவும், இளைப்பாரும் இடமாகவும், விளையாட்டு மைதானமாகவும். பிரச்னை பேசும் மன்றங்களாவும் இருந்திருக்கிறது. கிராமத்து மக்களுக்கு ஆலமரம் மறக்க முடியாத இன்னொரு வீடாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக