வியாழன், 4 ஆகஸ்ட், 2016

ஆடிப்பட்டம் தேடி விதை...

ஆடிப்பட்டம் தேடி விதை இது பழமொழி.

சித்திரை முதல் ஆனி வரை வெயிலின் ஆர்ப்பாட்டம். ஆடியில் காற்றுடன் மழையும் பெய்யும். அதனால் ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.

ஒரு விதை என்பது ஒருதுளி விருட்சம்! ஒரு பெரிய மரமானாலும் சரி, ஒரு சிறிய செடியனாலும் சரி, அது ஒரு விதைக்குள்தான் அடங்கி இருக்கிறது. விதைகள், தாங்கள் நல்லமுறையில் முளைத்து வருவதற்கு தகுந்த பருவகாலம் வரை மண்ணுக்குள் பல வருடங்கள் கூட காத்துக்கிடக்கின்றன.

இந்த ஆடிமாதமானது விதைகளை விதைப்பதற்கு தகுந்த பருவநிலையாக இருக்கிறது. ஆடிப்பெருக்கு என சொல்லப்படும் ஆடிப்பதினெட்டாம் நாள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆடிப்பட்டத்தை உறுதிசெய்யும் என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு நம்பிக்கை.

ஆடியும், விவசாயமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவை. ‘ஆடியில் காத்தடித்தால் ஐப்பசியில் மழை பொழியும்’ என்பதை முன்னோர் கணித்து ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்றனர். வானம் பார்த்த பூமியில் பயிரிடும் விவசாயிகள் ஆடிப்பட்டம் எப்போ வரும்? என காத்திருப்பர்.
ஆடி மாதம் துவங்கியதும் வறண்ட பூமியை ஆழமாக உழுது மானாவரி சாகுபடிக்காக கதிரவனை வணங்கி வானத்தை பார்த்து பூமியில் விதைகளை விதைப்பர். ஆடி மழை பெய்ததும் விதைகள் துளிர்விட்டு பயிர்களாக வளர்ந்து விவசாயிகள் வயிற்றில் பால்வார்க்கும்.

ஆடியில் விதைத்து ஐப்பசியில் அறுவடை செய்து தானியங்களை சேகரித்து வைப்பர். சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதம் கரும்புடன் பொங்கலிட்டு வணங்குவர். இது ஆண்டாண்டு காலமாக தமிழர்கள் கடைப்பிடிக்கும் விவசாய பண்பாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக